
|
About
Writer Sujatha
Copyright
Please... Respect
the author's copyright! Do not share e-Books with others.
Contact
Information
Writer Sujatha
No 19/32 C.G.Road
Nungambakkam
Chennai-34
Tamilnadu-India
Phone:+91-44-42280024
Email:
[email protected]

|

|
சென்ற வாரம் 1
டிசம்பர் சீஸன் களை கட்டத்
தொடங்கிவிட்டது. தேர்ந்தெடுத்த சில கச்சேரிகளுக்குப் போவேன்.
இந்த வாரம் பாம்பே ஜெயஸ்ரீ, கிதார் ப்ரசன்னா இரண்டு
கச்சேரிகளுக்குப் போனேன். பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒரு
விவரிக்க முடியாத வசீகரம் இருக்கிறது. மோகன கல்யாணியில் அவர்
பாடிய ராகம் தானம் பல்லவியிலும் ப்ருந்தாவன சாரங்காவில்
தில்லானாவிலும் அந்தக் குரலின் அத்தனை விஸ்தாரங்களும்
சாத்தியங்களும் தெரிந்தன. ஜெயஸ்ரீ, கிறிஸ்மஸ் கேரால்களை கனிமொழி
தமிழில் தர, பாடியிருப்பது இந்த வாரச் செய்தி.
கிதார் பிரசன்னா ஐஐடீ படித்தவர். அமெரிக்கா சென்று வென்றவர்,
துடிப்புள்ள இளைஞர். ஜாஸ், கர்நாடக இசை, இரண்டையும் அந்த
வாத்தியத்தில் அட்டகாசமாக வாசிக்கிறார். எலக்டரிக் கிதாரில்
இசைப்பதில் ஒரே ஒரு அசௌகரியம் அதன் தந்திகளுக்கிடையே சுருதி
கொஞ்சம் பிசகினாலும் இருநூறு தடவை அது ஆம்ப்ளிஃபையர் மூலம்
ஒலியேற்றப்பட்டு சாதாரண ஜனங்களுக்கும் காதில் உறுத்தும். மேலும்
விரல் தேய்க்கும் உரசல் சப்தத்தையும் மனசில் மைனஸ் பண்ணிக் கொள்ள
வேண்டியிருக்கிறது.
ஒரே கச்சேரியில் ஜாஸ், கர்நாடக சங்கீதம் இரண்டையும் கலக்காமல்
வாசிக்கலாமே என்று கச்சேரி முடிவில் அவரிடம் பேசிக்
கொண்டிருந்தபோது யோசனை சொன்னேன். அதற்கு ப்ரசன்னா 'இல்லை சார்..
நம்ம ரசிகர்களை இதுக்கு எப்பதான் பழக்கறது?' என்றார். பழக
வேண்டுமா?
ஜுபின் மேத்தாவை ஒரு சமயம் ஃப்யுஷன் பற்றிக் கேட்டபோது, 'எதற்கு
ஃப்யுஷன்? இரண்டுமே தனித்தனியாக உன்னதம் பெற்ற சங்கீத வடிவங்கள்
தாமே!' என்றார்.
ப்ரசன்னா அன்று வாசித்த கல்யாணி மட்டும் என் மனசில் அப்படியே
தேங்கி ரீங்கரித்தது.
- சுஜாதா
(இந்த பகுதி ஒவ்வொரு
வாரமும் தொடரும்) |