
|
About
Writer Sujatha

|

|
சென்ற வாரம் 1
புத்தாண்டுக்காக எல்லா நிறுவனங்களும்
டயரியும் காலண்டரும் போடுகிறார்கள். என்னிடம் இதுவரை பதினாலு
டயரிகளும்இருபது காலண்டர்களும் சேர்ந்துவிட்டன. ஏப்ரல் மாச
இறுதிவரை இவை வந்துகொண்டே இருக்கும்.
டயரி செய்யும் தொழில் நுட்பம் சிவகாசிக்கு நன்றியுடன், மிகவும்
முன்னேறிவிட்டது. அருமையாக பைண்டு செய்யப்பட்டு அமாவாசை, ஆவணி
அவிட்டம், சிலியின் தலைநகரம் தபால் ஆபிசில் எத்தனை கிராமுக்கு
எத்தனை ஸ்டாம்ப்பு ஒட்டவேண்டும் போன்ற அத்தியாவசியமான
விவரங்களுடன் தினத்துக்கு ஒரு வெள்ளைப் பக்கமாக அழகான காகிதத்தில்
சில சமயம் தங்க எழுத்துகளில் என் பெயரையும் பொறித்துத்
தருகிறார்கள். ஏதாவது அதில் எழுதலாம் என்றால் அதுவே ஒரு
பலாத்காரச் செயல் போலத் தோன்றுவதால் எதிர்கால வார்த்தைகளுக்காக
அவை காத்திருக்கின்றன.
காலண்டர்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு ரப்பர் பேண்டு போடப்பட்டு
திறக்கவே மனசு வருவதில்லை. திறந்தால் சுவரில் பாதியை அடைத்துக்
கொள்ளும். பக்கங்களில் விடுமுறை தினங்கள் சிவந்த எண்களில் கடந்த
மாதம், நடந்த மாதம், வரும் மாதம் எல்லாம் தந்து இவைகளை ரூம்
ரூமாக மாட்ட ஆணி போதவில்லை. ப்ளேபாய் ரேஞ்சுக்கு மக்டவல் பியர்
கம்பெனி காலண்டர் போட்டிருக்கிறார்களாம். அதை யாரும்
அனுப்புவதில்லை. எனக்கு வருவதெல்லாம் திருப்பதி பெருமாள்,
பாலமுருகன் இப்படித்தான். யாராவது இனிமேல் கேலண்டரும் டயரியும்
கொண்டு தந்தால் அதை நான் வாங்கி கொள்ள ஒரே ஒரு ஷரத்து - பதிலுக்கு
ஒரு காலண்டரும் டயரியும் கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
- சுஜாதா
(இந்த பகுதி ஒவ்வொரு
வாரமும் தொடரும்) |